Friday, 19 February 2016
இன்று சனிப் பிரதோஷம்:
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவதில் என்ன சிறப்புகள் என்பதை பார்ப்போம்.
பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.
மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும்.
இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.
பிரதோஷம் என்றால் என்ன?
சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.
சிவபெருமான் கைலாயத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் திருநடம் புரிந்து காட்சியளிக்கிறார். அப்பொழுது கலைமகள் வீணை வாசிக்க, அலை மகளான லட்சுமி தேவி பாடுகிறாள், திருமால் மிருதங்கம் வாசிக்க இந்திரன் புல்லாங்குழல் ஊதுகிறார். பிரம்மதேவர் தாளமிட தேவர்கள் முனிவர்கள் யாவரும் கைலாயம் வந்து இறைவனை வணங்குகிறார்கள் என்பது புராதன வரலாறு.
ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.
அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு. நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.
இனி பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.
எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் "சனிப் பிரதோஷம்" என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் "மஹாப் பிரதோஷம்" என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை.
பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம். எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment