Thursday, 20 August 2015
மனித வடிவில் வந்த சிவன்
:
பக்தர்களைக் காப்பதற்காக பரமேஸ்வரன் எத்தனை எத்தனையோ திருவிளையாடல்களைப் புரிந்திருப்பது தெரிந்திருக்கும். அவர் மக்களைக் காத்திட மானிட வடிவம் எடுத்து வந்த புராணக்கதை தெரியுமா?
ஏன், எதற்காக மானிட வடிவம் எடுத்தார் மகேசன்?
முன்னொரு காலத்தில் சுந்திரபத்திரன் என்ற அசுரன், சிவபெருமானை வணங்கி பல அரிய வரங்கள் பெற்றான். அவற்றுள் முக்கியமானது, அவனது மரணம் சிவசக்தி சொரூபமானவரால் மட்டுமே நிகழ வேண்டும். அதுவும் எம்பெருமான் மனித அவதாரம் எடுத்து முடித்திருந்தால் மட்டுமே அவனைக் கொல்ல முடியும் என்ற சிக்கலான வரம் பெற்று இருந்தான். அதனால், இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியைக் கைப்பற்றியதோடு, மூவுலகிலும் பலவகையில் தொல்லை கொடுத்து வந்தான். அசுரனின் தொல்லை பொறுக்க முடியாமல் யாவரும் சிவபெருமானிடம் முறையிட்டு காக்குமாறு வேண்டினர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர், மனதில் ஒரு திட்டத்தோடு மகேஸ்வரியைப் பார்க்கச் சென்றார், ஈசன். அப்போது தவத்தில் ஆழ்ந்திருந்தாள் அம்பிகை. அசுரனை அழித்து தேவர்களைக் காக்க வேண்டும், உடனே புறப்படு! என்று கூறி அவர் முன் நின்றார், ஈசன். ஐயன் கூறியதைக் கேளாமல் உமையவள் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து இருந்தாள். அதனால் கோபம் கொண்ட எம்பெருமான், ‘‘என்னுடைய சொல் கேட்டு பதில் கூறாமல் இருக்கும் நீ, மானிடப் பெண்ணாகப் பிறப்பாய்!’’ என சாபமிட்டார். தியானத்தில் இருந்து விழித்தெழுந்த பார்வதிதேவி, ஐயனை நோக்கி, ‘‘என்னில் பாதியாக விளங்கு பவர்தானே நீங்கள்... அதனால் தாங்களும் மனிதனாகப் பிறக்க வேண்டும்!’’ என சாபமிட்டாள். ஈசனின் திட்டப்படியே நடந்தது இது.
அவ்வார்த்தையைக் கேட்ட ஈசன் மனித அவதாரம் கொண்டார். அம்பிகை அவரைவிட்டு விலகி இருந்ததால், சக்தியற்றவராக உலகமெல்லாம் பித்தனாக அலைந்து திரிந்தார். பரமனின் இந்நிலை கண்டு உலக உயிர்கள் பயத்தில் நடுங்கின. தேவர்கள் முதலானோர் உமாதேவியை வணங்கி காத்து அருளுமாறு வேண்டினர். உடனே தாய தன் சூலாயுதத்தை வீசி எறிந்தாள். அது பறந்து சென்று, பூமியில் ஓர் இடத்தில் பிரகாசமான ஒளியுடன் நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து இருபத்தொரு மண் உருண்டைகள் சிதறி சுற்றிலும் வீழ்ந்தன. அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக மாறி, மகேசனின் வருகைக்காக காத்து நின்றன. சூலாயுத ஒளியைக் கண்டு அங்கு வந்த எம்பெருமான் ஓர் இடத்தில் பாதம் பதித்து நிலையாய் நின்றார். பார்வதி தேவி அங்கு வந்து அவரை வணங்கினாள். ஒரு நாழிகை நேரம் மனிதனாக இருந்தவர் பின் சிவமாய் உருமாறினார். ‘‘மனிதனாக இவ்வுலகை வலம் வந்த ஆண்டவராகிய நீங்கள், பெரியாண்டவர் என்று அழைக்கப்படுவீர்!’’ என உமையவள் கூறினாள். இவ்வார்த்தையைக் கேட்ட தேவர் முதலானோர் ‘‘பெரியாண்டவா! பெரியாண்டவா!’’ எனக் கூறி அழைத்து அவர் பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர்.
visit: bairavafoundation.org
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment